Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

வருகிறேன் சென்னை !!

Jun 16, 2009


ருபத்தி இரண்டு மாதங்களாகிவிட்டது சென்னையை விட்டு இங்கு வந்து... (ங்கொய்யால எவ்ளோ நாளாகிப்போச்சு)

நட்புகள், உறவுகள், சுற்றித்திரிந்த தெருக்கள் (சைட் அடிச்ச ஃபிகர்கள விட்டுட்டியேன்னு மனசாட்சி எக்கோ குடுக்குது...), வாரந்தோறும் விளையாடிய 'சோமசுந்தரம் கிரவுண்டு', 'நெருங்கிப்'பழகிய தி.நகர் கடைகள் (யப்பா.. எம்பூட்டு கூட்டம்), சில்லென்ற கடற்கரை காற்று இவையனைத்தையும் துறந்து இங்கு வரவேண்டிய அலுவலக கட்டாயம்..

ஒருவழியாக வந்த வேலை இனிதே முடிவடைய (விடுவோமா, முடிச்சுட்டோம்ல!!), இந்த மாத இறுதியில் சென்னை திரும்ப முடிவாயிற்று !! ஆஹா... என்ன ஒரு நிறைவான உணர்வு அது (வெய்யிலுக்கு கும்முன்னு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி !!).. மீண்டும் 'நம்ம' ஊருக்கு திரும்பப்போகிறோம் என்கிற ஆனந்தம் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது.... கடந்த சில நாட்களாகவே வீட்டில் மனைவி 'இன்னும் பதினெட்டு நாட்கள் தான்.. இன்னும் பதினேழு நாட்கள் தான்' என்று (இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு குடுக்கற கவுன்ட்டவுன் மாதிரி) பூரித்துக்கொண்டிருக்கிறாள்..

மெரிக்கா - தொழில் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் (அதாங்க பர்சனல் லைப் - அத 'டேமில் '-ல சொல்ல தெரியலே.. :)) ) எனக்கு நன்றாகவே வாழ்வளித்தது.. மிகப்பெரிய பதவி உயர்வையும் தந்திருக்கிறது. ஆமாம், 'அப்பா' என்ற பதவி உயர்வு கிடைத்ததும் இந்த 22 மாதங்களுக்குள்ளாகத்தான். ஒப்பிட முடியாத, மட்டற்ற மகிழ்ச்சியை தந்த அனுபவம் அது !!

ஆக, ஜூன் 29 -ஆம் தேதியன்று, மிகுந்த மன நிறைவோடு அமெரிக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னையை நோக்கி எனது பயணத்தை தொடங்கப்போகிறேன்..

ருகிறேன் சென்னை, வாரி அணைக்கக் காத்திருக்கும் உறவுகளும் நட்புக்களுக்கும் எனது வாயார, மனமார நன்றிகளைக் கூறி விடுவேன்.... ஆனால், எனை ஓய்வின்றித் தாங்கி, பிரியா விடைகொடுத்தனுப்பிய தாய்மண்ணே, உனக்கெப்படி நன்றி சொல்வேன் ? உன்னுடன் மீண்டும் சேர ஓடோடி வருகிறேன். வருகிறேன் சென்னை... !!